
[படம் நன்றி - BBC]
விஜய் அவர்களுக்கு, “தமிழ்நாடு” என்கிற பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? தமிழறிஞர்கள் தமிழ்நாட்டிற்கு ஏன் ‘தமிழ்நாடு’ என்றே பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள் என்று தெரியுமா? பேரறிஞர் அண்ணா மெட்ராஸ் மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என ஏன் பெயர் சூட்டினார் என தெரியுமா? அதற்கு முன்னால் நடந்த வரலாற்றுப் போராட்டங்கள் பற்றித் தெரியுமா?
‘தமிழ்நாடு’ என்ற பெயருக்காக தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக வரலாறு தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகள் பற்றித் தெரியுமா? உங்கள் மாநிலத்திற்கு ஏன் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் இருக்கிறது? அதை ‘தமிழகம்’ என்றே வைத்துக் கொள்ளலாமே என வடக்கிலிருந்து ஏன் குரல் எழுகிறது என்று தெரியுமா? அதுவே ஏன் ஆளுநரின் குரலாகவும் ஒலிக்கிறது என தெரியுமா? இதைத் தமிழ்நாடு ஏன் கடுமையாக மறுக்கிறது என்று தெரியுமா?
இவையெல்லாம் ஆழமாகத் தெரிந்திருந்தால், அவர் தன் கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” எனப் பெயர் வைத்திருக்க மாட்டார்!
விஜய் அவர்கள் பெரியாரும் அண்ணாவும் எங்கள் கொள்கைத் தலைவர்கள் என்கிறார். ஆனால், நடைமுறையில் அவர்களின் கொள்கைக்கு நேர் எதிராகச் செல்வது போல் அல்லவா இருக்கிறது… வெறும் ஓட்டுகளுக்காக மட்டுமே அவர்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ என்கிற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை!
"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின்"
– சிலப்பதிகாரம்
தண்டமிழ் நாட்டைத்
தமிழன்னை காக்கும்…
நன்றி, வணக்கம்!